புதுடெல்லி: வரும் ஆண்டுகளில் பாஜக கேரளாவிலும் ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், திரிபுராவிலும், நாகாலாந்திலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய நரேந்திர மோடி, ”பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பொய் பிரச்சாரத்தை மக்கள் ஏற்கவில்லை. பாஜக என்றால் தொழிலதிபர்களுக்கான கட்சி, நடுத்தர மக்களுக்கான கட்சி என பலவித லேபிள்களை எதிர்க்கட்சிகளும் அவர்களின் இகோசிஸ்டமும் ஒட்டிக்கொண்டே இருந்தன.
ஆனால், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியல் சமூக மக்கள் எல்லோரும் தற்போது பாஜகவோடு இருக்கிறார்கள். பாஜக பாகுபாடு இல்லாமல் அனைவருக்காகவும் செயல்படுகிறது. பாஜகவைக் கண்டு இஸ்லாமியர்கள் அஞ்சுகிறார்கள் என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்க்கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
கோவாவில் இருக்கும் கிறிஸ்தவர்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜகவை ஆதரித்து வருகிறார்கள். இதன்மூலம் பாஜக சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற பொய்யை கோவா அம்பலப்படுத்தியது. கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் மேகாலயா மற்றும் நகாலாந்திலும் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
பாஜகவுக்கு எதிரான பொய்கள் படிப்படியாக அம்பலப்பட்டு வருவதால், வரும் காலங்களில் பாஜக மேலும் விரிவடையும். வரும் ஆண்டுகளில் கேரளாவிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். கேரளாவில் எதிரெதிர் கட்சிகளாக இருக்கும் சிபிஎம் – காங்கிரஸ், திரிபுராவில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த இரு கட்சிகளின் கபட நாடகத்தை கேரள மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காகவே அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்ற உண்மை தற்போது வெளிப்பட்டுள்ளது.
மூன்று மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவை சிறிய மாநிலங்கள் என கூறியுள்ளார். இதன் மூலம் அவர் மூன்று மாநிலங்களையும், மாநில மக்களையும் அவர் அவமதித்துள்ளார். பாஜகவைப் பொறுத்தவரை வட கிழக்கு மாநிலங்கள் டெல்லியில் இருந்தும் சரி, இதயத்தில் இருந்தும் சரி தொலைவில் இருப்பவை அல்ல. சமீபத்தில் எனக்கு ஒரு விஷயம் சொல்லப்பட்டது. பிரதமராக நான் 50 முறை வட கிழக்கு மாநிலங்களுக்கு வந்திருக்கிறேன் என்று. நான் அடிக்கடி அங்கு செல்வதன் மூலம் அம்மக்களின் இதயங்களை வென்றிருக்கிறேன். உண்மையில் இது எனக்கு மிகப் பெரிய வெற்றி” என தெரிவித்துள்ளார்.