அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்து இருக்கக்கூடிய இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிளை இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக இரு அணிகளாக பிரிந்து போட்டியிடுகின்றன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தார். ஓபிஎஸ் அணியில் அவரது தீவிர விசுவாசியான செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தேர்தல் தொடர்பாக பாஜக தனது நிலைபாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கபப்டவில்லை. இந்நிலையில் நேற்று அவசர பயணமாக தமிழக பாஜக தலைவர் டெல்லி சென்றார். டெல்லியில் இருந்து திரும்பியவுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தையும் அண்ணாமலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரையும் இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.