பாஜக – அதிமுக விவகாரம்: இபிஎஸ் தாமரைக்கு கேட் போட்ட இபிஎஸ் .. மெகா கூட்டணிக்கு ரெடியாகும் எடப்பாடி..?

சென்னை : அதிமுகவில் மீண்டும் பாஜக தரப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தருவது போல நடந்து கொள்வதால் கடும் அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அந்தக் கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு விட்டு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைக்கலாம் என்பதற்கான உறுதியான சிக்னல்கள் கிடைத்து இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.

பாஜக – அதிமுக கூட்டணி விவகாரம் தான் தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக இருக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அக்கட்சியின் தலையீடு இருப்பதை துளியும் விரும்பாத எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் எண்ணம் இல்லை என உறுதியாகக் கூறிவிட்டார்.

ஆனால் இருவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வருகின்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியும் என விரும்புகிறது. அதற்காக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என முயற்சித்து வரும் நிலையில், அதனை முற்றிலுமாக விரும்பவில்லை.

இந்நிலையில் பாஜக தலைமையுடன் எடப்பாடி பழனிசாமி விலகிச் செல்வது ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு பிறகான நிகழ்வுகள் தனக்கு சாதகமாக இருப்பதாக கருதுகிறது ஓபிஎஸ் தரப்பு. இதனால் எடப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அதற்குப் பிறகு ஜி 20 மாநாட்டுக்கு எடப்பாடிக்கு பாஜக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என அழைப்பு விடுத்தது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் குஜராத்தில் நடைபெற்ற பாஜக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபோன்ற சந்திப்புகள் நிகழவில்லை. அதே நேரத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதோடு தனக்கு இழைக்கப்பட்ட சில விஷயங்கள் குறித்து வெகுவாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து பாஜக அவருக்கு மீண்டும் ஆதரவு கரம் நீட்டும் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களாகவே பாஜக தரப்பு மீது கடும் அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற தேர்தலில் பாஜகவை கழட்டிவிட்டாலும் ஆச்சரியம் இல்லை என்கின்றனர் மூத்த அரசியல் நிபுணர்கள். ஏனென்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானதாக இருக்கும் நிலையில் அதில் குறைந்தபட்சம் 10 முதல் 15 எம்பிக்கள் வெற்றி பெற்றாலும் எடப்பாடியின் தலைமையை தொண்டர்களும் தமிழக மக்களும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் என்பதால் அதனை சாதித்துக் காட்ட வேண்டும் என தீவிர முனைப்பில் இருக்கிறார் எடப்பாடி.

தற்போது பாஜக எதிர்ப்பு காரணமாக அதிமுகவின் வாக்கு வங்கியும் வெகுவாக சரிந்துள்ள நிலையில் பாஜகவை விட்டு விலகினால் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் பெரும்பாலானவை மீண்டும் அதிமுகவுக்கு கிடைக்கும். இதனால் திமுக தலைமையில் இருக்கும் சில கட்சிகளும் குறிப்பாக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே அதிமுக தனித்துப் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கூறிவரும் நிலையில் தற்போது எடப்பாடியும் அதனை கருத்தில் கொண்டு மறைமுகமாக பாஜக தலைமையை எதிர்த்து வருகிறார்.

இதனால் அதிமுக பாஜக கூட்டணி உடைந்து புதிய கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அதே நேரத்தில் அதிமுகவை பாஜக அவ்வளவு எளிதில் விட்டு விடாது பல நெருக்கடிகள் கொடுக்கும் என்பதால் அதிலும் எடப்பாடி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக தனது தரப்பிலிருந்து பாஜக திறப்புக்கு ஆதரவாக யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா லேடியா என ஜெயலலிதா கேட்டது போல தற்போது மோடியா எடப்பாடியா? என பேசும் அளவுக்கு எடப்பாடியின் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கிறது என்கின்றனர் அவர் தரப்பு நிர்வாகிகள்.