உச்சகட்ட பரபரப்பில் பீகார் அரசியல் களம் : ஆளுநரைச் சந்திக்கிறார் நிதிஷ் குமார்-ஆர்ஜேடி, பாஜக அவசரக் கூட்டம்..!!

பீகார் அரசியல் சூழல் பரபரப்பை எட்டியுள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒருபக்கம் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் நடத்துகிறது.

மறுபுறம் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் எம்எல்ஏக்கள்கூட்டம் நடத்துவதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று பிற்பகல் 12.30மணி அளவில் பீகார் ஆளுநரைச் சந்திக்க முதல்வர் நிதிஷ் குமார் நேரம் கேட்டுள்ளார் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், ஆளுநரைச் சந்தித்து முடித்தபின் பீகார் அரசியலில் பெரும் திருப்பம் ஏதும் நடக்கலாம் என்று தெரிகிறது.

பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக பாஜகவு தலைவர்களுக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு தற்போது விரிசலாக மாறியுள்ளது.

மேலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருக்கும் மூத்த தலைவர் ஆர்சிபி சிங்கை வைத்து கட்சியை உடைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியால் நிதிஷ் குமார் உச்சகட்ட கோபமடைந்துவிட்டார்.

இதனால் பாஜகவுடனான நட்பை முறித்துக்கொள்ளவும் தயாரிகிவிட்டார்.
இது தொடர்பாக முடிவு எடுக்க ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் இல்லத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே கூட்டம் முடிந்தபின் பிற்பகலில் ஆளுநரைச் சந்திக்கவும் முதல்வர் நிதிஷ் குமார் நேரம் கேட்டுள்ளார்.

ஒரு வேளை பாஜகவுடனான நட்பை நிதிஷ் குமார் முறித்துக்கொண்டு கூட்டணியைவிட்டு வெளியேறினால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஆலோசனை நடத்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் சர்குலர் பங்களாவில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதற்கிடையே பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான தார்கிஷோர் பிரசாத் தனது இல்லத்தில் பாஜக எம்எல்ஏக்களுடனும், மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் பீகார் அரசியலில் அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் பரபரப்பாகியுள்ளன.

ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கூறுகையில், தேசிய ஜனநாயகக்கூட்டணிக்குள் எந்தவிதமான கருத்துமோதலும் இல்லை. ஒவ்வொரு கட்சியும் அவசரக் கூட்டம் கூட்டியிருப்பது அவர்களின் கட்சியின் நிலைப்பாட்டை ஆலோசிக்கவும், விவாதிக்கவும்தான். மாநிலத்தில் பெரியஅரசியல் மாற்றத்துக்கு வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தனர்.

இதனால், பீகார் அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா, அல்லது பாஜகவுடன் சகித்துக்கொண்டு, நிதிஷ் குமார்ஆட்சியைத் தொடரப்போகிறாரா என்பது விரைவில் தெரியவரும்