பெங்களூர்: பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டணி ஆலோசனை நடந்து வரும் நிலையில், புதிய கூட்டணிக்கு சோனியா காந்தி தலைமை ஏற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைமையில் டெல்லியில் இன்று தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையிலான கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இரண்டாவது நாளாக இன்று பெங்களூரில் நடக்க உள்ளது. பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் கட்டமாக இரவு நேர விருந்து கொடுக்கப்பட்டு விருந்திற்கு இடையே சிறிய அளவிலான ஆலோசனைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
இன்று நடக்கும் கூட்டத்தில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த முறை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முழுக்க முழுக்க கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் இந்த முறை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளார்.
24 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.
இன்று நடக்கும் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இது தவிர, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் இந்த மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டணி ஆலோசனை நடந்து வரும் நிலையில், புதிய கூட்டணிக்கு சோனியா காந்தி தலைமை ஏற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ்தான் பெரிய கட்சி. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் வேட்பாளர் பதவி அளிக்கப்பட வாய்ப்பு இல்லை.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிக்கான தலைவர் பதவி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணிக்கு புதிய பெயர் விரைவில் தேர்வு செய்யப்படலாம். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல் இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பிரதமர் வேட்பாளராக எதிர்காலத்தில் நிதிஷ் குமார் தேர்வாகும் வாய்ப்புகள் உள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் ஆகியோருக்கு கூட்டணியின் குழுவின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கான குறைந்தபட்ச திட்ட அறிக்கை, எப்படி கட்சிகளை ஒன்று இணைப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது..