ஈரோடு: ஈரோடு பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. தமிழகத்தின் 2வது மிகப்பெரிய ஆணையாகவும், தெற்காசியாவின் மிகப்பெரிய மண் அணையாகவும் போற்றப்படக்கூடிய பவானிசாகர் அணையினுடைய நீர்மட்டம் இந்தாண்டு முதல்முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
மொத்த கொள்ளளவு 105 அடி கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன் பாசன பகுதிகளில் 8.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி செய்கின்றன. நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த 1 மாத காலத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கான நீர்வரத்தானது, படிப்படியாக அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.
அதிகப்படியாக, வினாடிக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கனஅடி நீர் வந்ததன் காரணமாக படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த 1 வார காலமாக நீர்வரத்தானது சற்று குறைந்து 99 அடியிலேயே நீடித்து வந்த நிலையில், இன்று காலை 99.9 அடியாக இருந்த நீர்மட்டம் 12 மணியளவு நிலவரப்படி 100 அடியை தொட்டுள்ளது. அணைக்கான நீர்வரத்தானது வினாடிக்கு 2,327 கனஅடியாக உள்ளது. பாசன பகுதிகளில் தற்பொழுது மழை பெய்துள்ள காரணத்தால், பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையை பொருத்தமட்டில், ஜூலை 31ம் தேதி வரை 100 அடி மட்டுமே தண்ணீர் தேக்கப்படும்.
இதுவே அணையின் பாதுகாப்பு விதி. அதன் பின் 102 அடி, 105 அடி என நீர்வரத்தை பொருத்து படிப்படியாக தண்ணீர் தேக்கப்படும். இந்நிலையில் நீர்வரத்து குறைவாக வருவதால் உபரிநீர் திறப்புக்கு அவசியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பவானிசாகர் அணையில் நீர்வரத்து 100 அடியை எட்டியுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.