பாரத் பயோடெக்கின் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து: அடுத்த வாரம் அறிமுகம் – 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்தலாம்.!

பாரத் பயோடெக்கின் மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்து அடுத்த வா ரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக்கின், மூக்குவழி செலுத்தும்(நாசி) தடுப்பு மருந்து அடுத்த வாரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும், விலை நிர்ணயம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் பெருகிவரும் நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஆரம்பத்திலேயே அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியா முன்னேற்பாடுகள் செய்துவருகிறது.

இருப்பினும் ஒமிக்ரானின் துணை வகையான BF.7 ஆல் ஏற்கனவே இந்தியாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது இந்த தடுப்பு மருந்து குறித்த தகவல் வந்துள்ளது. தடுப்பு மருந்து சோதனைகளை முடிப்பதற்கு இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டு துறை DCGI (Drugs Controller General of India) அனுமதி அளித்துள்ளதாகவும், முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

பாரத் பயோடெக், வாஷிங்டன் பல்கலைக்கழக செயின்ட் லூயிஸ் உடன் இணைந்து இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியுடையது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஊசி இல்லாமல் செலுத்தப்படும் இந்த நாசி தடுப்பு மருந்தானது பல நன்மைகளைக் கொண்டுள்ளது, இந்த தடுப்பு மருந்து செலுத்துவதற்கு பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.