பிளாஸ்டிகை தின்னும் பாக்டீரியா… பூமியை அழிக்கும் நெகிழிக்கு இனி குட் பை… விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு..!

பூமியை தின்று கொண்டிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை தின்று தீர்ப்பதற்காக ஒரு நுண்ணுயிரியை கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இனி பிளாஸ்டிக்குக்கு ஆப்பு வைக்கும் ஒன்றுதான். இதுவரை எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இப்படி ஒரு விசித்திரமான, நம்ப முடியாத ஒரு படைப்பை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை மக்களே.! அப்படி என்னப்பா கண்டுபிடிப்புனு கேட்கிறீர்களா? அது தான் பிளாஸ்டிக் தின்னும் பாக்டீரியா.

பூமி தோன்றியது முதல் பூமிக்கு எத்தனையோ ஆபத்துகளும் நெருக்கடிகளும் வந்திருக்கின்றன. அவையெல்லாம் தற்காலிகமானது தான். ஒரு நாள் தீர்வு கிடைத்து நிம்மதியாகிவிடும். ஆனால் பிளாஸ்டிக் என்று புழக்கத்திற்கு வந்ததோ, அன்று முதல் தொடங்கியது பூமிக்கு நிரந்தர தலைவலி. உலகம் முழுவதும் பெருகி வரும் மக்கள் தொகையை விட அதிகமாக குவிகிறது பிளாஸ்டிக் குப்பைகள். இப்போது பூமிக்குள் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மக்கி சிதையவே பல ஆயிரம் ஆண்டுகள் ஆகுமாம்.

இதனால் கவலையடைந்த விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கிற்கு ஒரு எமனை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசுதான் பிளாஸ்டிக் உண்ணும் பாக்டீரியா. கடந்த சில ஆண்டுகளாக PET போன்ற பொதுவான பிளாஸ்டிக்குகளை அழிக்கும் என்சைம்களை நமது விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இருப்பினும், இதன் வேகம் குறைவு தான். அதனால் தான் அதிவேக புதிய வகை என்சைம் ஒன்றை இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நியூ அட்லஸால் அறிவிக்கப்பட்ட புதிய என்சைம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜப்பானில் முதன்முதலில் அறிமுகமானது.

இது ஒரு பாக்டீரியாவை அடிப்படையாகக் கொண்டது. இந்த PET பிளாஸ்டிக்களை உணவாக உண்டு சில வாரங்களில் பிளாஸ்டிக்கை சிதைத்து அழித்துவிடுகிறது. பின்னர் படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளால் MHETase என அழைக்கப்படும் மற்றொரு மேம்படுத்தப்பட்ட என்சைம் உருவாக்கப்பட்டுப் பெயர் மாற்றப்பட்டது. தற்போது பிளாஸ்டிக்கை ஆறு மடங்கு வேகமாக உண்ணும் திறன் கொண்ட சூப்பர் என்சைமாக ஒரு நுண்ணுயிரியை உருவாக்கியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இத்துடன், இந்த ஆராய்ச்சி நின்றுவிடவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எதிர்காலத்தில் இதை விட இன்னும் வேகமாக பிளாஸ்டிக்கை அழிக்கும் என்சைம்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய கண்டுபிடிப்பு மூலம், உலகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நம்மால் பூமியில் இருந்து அழிக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். எது எப்படியோ, பூமியை கொஞ்சம் கொஞ்சமாக தின்று அழித்து வரும் பிளாஸ்டிக்கிற்கு அழிவு வந்தால் நன்மை தான். இப்படி நடந்தால் வீட்டிற்கு வீடு இந்த நுண்ணுயிரியை பெற்று குப்பைத் தொட்டியில் போட்டுக்கொள்ளலாம். பிறகு தைரியமாக கூடை கூடையாக கேரி பேக்குகளை கொண்டு வந்து குப்பைத் தொட்டியில் வீசலாம்.