எடப்பாடிக்கு பின்னடைவு… அதிமுக அலுவலக சாவி யாரிடம் இருக்கும்..? – வந்த நெகட்டிவ் தகவல்..!

சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது, ஒட்டுமொத்த சூழலையும் தலைகீழாகத் திருப்பிப் போட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பே, ஓபிஎஸ் கை ஓங்குவதற்கு வலுவாகக் கிடைத்துள்ள பிடியாகப் பார்க்கப்படுகிறது.

அதிமுக தலைமைக் கழக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் செய்த மேல் முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

இன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள தலைமைக் கழக சாவி வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓபிஎஸ் தரப்பினர், உச்ச நீதிமன்றத்திலும் தங்களுக்கு சாதகமான முடிவே வரும் என உற்சாகத்தோடு கூறி வருகின்றனர். அதே நேரம், ஈபிஎஸ் தரப்பு கவலையில் ஆழ்ந்துள்ளது.

அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார்.

இது தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக தொடர்ந்த வழக்கில் அதிமுக தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் போதிய பாதுகாப்பு வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் வட்டாட்சியர் தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுத்ததற்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு முன்னதாக பட்டியலிடுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, நாளைய தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நேற்று  அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதியின் நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாகவே செயல்படுவார்கள்.

நேற்று  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு அதிமுக தலைமைக் கழக சாவி வழக்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பெரும்பான்மை இருப்பதாகவும், இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் முன்வைத்த வாதங்களின் அடிப்படையிலேயே அலுவலக சாவி ஈபிஎஸ் வசம் ஒப்படைக்கும் தீர்ப்பை வழங்கியிருந்தது சென்னை உயர் நீதிமன்றம்.

ஆனால், இப்போது பொதுக்குழுவே செல்லாது என்றும், ஜூன் 23க்கு முந்தைய நிலையே தொடரும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. உச்ச நீதிமன்றம் நிச்சயமாக இந்தத் தீர்ப்பையும் கருத்தில் கொள்ளும் என்பதால், அடுத்து ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழுவைக் கூட்டும் வரை, அலுவலக சாவி தொடர்பான ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அதிமுக தலைமைக் கழக சாவி வழக்கு, அதிமுகவின் உரிமை சார்ந்த பிரச்சனை. நேற்றைய  தீர்ப்பின் மூலம் அதிமுகவில் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாகத் திரும்பும் என்றும், அலுவலகத்திற்குச் செல்வதிலும் இருவருக்கும் சம உரிமை அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாகவும், ஈபிஎஸ்ஸுக்கு பெரிய பின்னடைவாகவும் அமையும்.

அதிமுக தலைமை அலுவலக சாவியைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி இன்னும் ஒரு முறை கூட அலுவலகத்திற்குச் செல்லவில்லை. ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவின் காரணமாக, தானும் அங்கு செல்லாமல் இருந்து வந்தார் ஈபிஎஸ். இந்நிலையில், இந்த வழக்கும் ஓபிஎஸ் பக்கம் திரும்பியிருப்பது ஈபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.