சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால் தான் அதிகமாக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது.
முதல்கட்டமாக அதனை சரிசெய்ய போக்குவரத்து காவல்துறை களத்தில் இறங்கியுள்ளது. அதன்படி சென்னை மாநகரம் முழுவதும் உள்ள முக்கிய சிக்னல் சந்திப்புகளான அண்ணா சாலை, தேனாம்பேட்டை, வேப்பேரி, சென்ட்ரல், கோயம்பேடு, ஓஎம்ஆர் சாலை, அடையாறு, திருவான்மியூர் என 150 சிக்னல்களை அடையாளம் கண்டுள்ளது.
இங்கு நேற்று அதிகாலை முதல் போக்குவரத்து போலீசார், விதிகளை மீறி சிக்னல் விழுவதற்கு முன்பு வாகனம் இயக்குபவர்கள், திருப்பம் இல்லாத இடத்தில் திரும்புதல், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சவாரி செய்தல், ஒழுங்கற்ற முறையில் சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள எல்லைக்கோட்டை தாண்டி வாகனம் நிறுத்திய வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை குறித்து எடுத்துறைத்தனர்.
அனைத்து சிக்னல்களில் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து விதிகள் குறித்து போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அப்படி இருந்தும், பல வாகன ஓட்டிகள் விதிகளை மீறி வாகனங்கள் இயக்கி வருகின்றனர். அவர்களை சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் கண்டு அவர்களுக்கு ரசீது அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் உள்ள 150 முக்கிய சிக்னல்களில் எல்லைக்கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்தியவர்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு மொத்தம் 3,702 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் அபராதமாக தலா ரூ.500 வசூலிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள முக்கிய சாலை சந்திப்புகள், இணைப்பு சாலைகள் என 380க்கும் மேற்பட்ட சிக்னல்களில் எல்லைக்கோட்டிற்குள் வாகனங்களை நிறுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான எல்லைக்கோடுகள் அமைக்கும் பணிகள், சிசிடிவி கேமராக்கள் அமைப்புக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.