வங்கதேசத்தில் ஒரே இரவில் 14 இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் வடமேற்கு பகுதியில் தாக்குர்கான் மாவட்டத்தில் உள்ள பலியடாங்கி உபாசிலாவில் உள்ள 14 இந்துக் கோயில்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரவோடு இரவாக திட்டமிட்டு நாசப்படுத்தியதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை இப்பகுதியில் உள்ள தண்டலா, சாரோல் மற்றும் பாரியா ஒன்றியங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் தாக்குதல்கள் நடந்ததாக பலியடங்கி பொலிஸார் தெரிவித்தார்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எவ்வாறாயினும், சம்பவத்திற்கு காரணமானவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சில சிலைகள் அழிக்கப்பட்டதாகவும், சில கோயில் தலங்களிலுள்ள குளத்து நீரில் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்து சமூகத் தலைவரும், யூனியன் பரிஷத் தலைவருமான சமர் சட்டர்ஜி கூறுகையில், “கடந்த காலத்தில் இதுபோன்ற கொடூரமான சம்பவம் எதுவும் இங்கு நடக்கவில்லை” என்பதால், இப்பகுதி எப்போதும் சிறந்த மதங்களுக்கு இடையே நல்லிணக்கம் உள்ள பகுதியாக அறியப்படுகிறது.
“பெரும்பான்மையினரான இஸ்லாமிய சமூகத்திற்கு எங்களுடன் (இந்துக்கள்) எந்த சர்ச்சையும் இல்லை. இந்த குற்றவாளிகள் யார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை,” என்று அவர் கூறினார்.
“நாட்டின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாக இது தெளிவாகத் தெரிகிறது” என்று தாகூர்கானின் காவல்துறைத் தலைவர் ஜஹாங்கிர் ஹொசைன் கோவில் தளம் ஒன்றில் செய்தியாளர்களிடம் கூறினார்.