மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்” – உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் தங்கியிருந்ததாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் தனது கைது நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும் கைதை எதிர்த்தும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, டிஜிட்டல் ஆதாரங்கள் அழித்தது மற்றும் 100கோடி பண பரிவர்த்தை செய்தமைக்கான, ஹவாலா ஆதாரங்கள் ஆகியவற்றை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.இதனையடுத்து, அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாவது, மதுபானக் கொள்கை விவகாரத்தில் விற்பனையாளர் லாபம் மட்டுமே சுமார் 590கோடி கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் விசாரணை தொடங்கியதும் அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி நாங்கள் எந்த கவனமும் செலுத்தவில்லை. பல்வேறு கட்ட விசாரணையை தொடர்ந்த போது தான் இந்த விவகாரத்தில் அவரது பெயர், மற்றும் திட்டத்தில் அவரது பங்கு ஆகியவை குறித்து ஆதாரத்துடன் உறுதியானது. இருப்பினும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மகுந்தா மற்றும் சரத்ரெட்டி ஆகியோரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து எந்தவித கேள்வியும் கேட்கப்படவில்லை. இந்த வழக்கில் முதல் நபர் 2020 மார்ச் 9ம் தேதி கைது செய்யப்பட்டார். அதேவேளையில். சரத் ரெட்டி 2022 நவம்பர் 10ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குற்றவியல் நடகமுறை சட்டம் பிரிவு 164ன் கீழ் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார், அப்போது எந்த விசாரணை அதிகாரிகளும் உடனில்லை. இந்த மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணம் மூலம் கோவா தேர்தலுக்கு செலவு செய்துள்ளனர். மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததார். மேலும் கெஜ்ரிவால் 100 கோடி ரூபாய் வேண்டும் என எவ்வாறு வலியுறுத்தியுள்ளார் என்பது தொடர்பான ஆதாரங்கள், விவரங்கள் உள்ளன. இந்த ஊழல் தொடர்பான விசாரணை விரிவடைந்தபோது தான் கெஜ்ரிவாலின் பங்கு தெளிவாக புலப்பட்டது.’ என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.