பாராளுமன்றத் தேர்தலில் தலைமை அறிவித்தால் போட்டியிட தயார் – அருண் நேரு.!!

திருச்சி மாவட்டத்தில் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராக இருந்த கே.என்.நேரு இப்போது மாவட்ட அரசியலை கைவிட்டு மாநில அரசியலுக்கு சென்றுவிட்டார். திமுகவில் முதன்மை செயலாளராக உள்ள அவர், கூட்டணி விவகாரம், உட்கட்சி பஞ்சாயத்து போன்ற பணிகளை சென்னையில் இருந்தவாறு செய்து வருகிறார்.
எப்படி இருந்தாலும், தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருச்சிக்கு ஓடோடி சென்று கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகள், தனது திருச்சி மேற்கு தொகுதி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கே.என். நேருவின் மகன் அருண் நேரு, தங்களுக்கு சொந்தமான தொழில்களை கவனித்து வருகின்றார்.
அதுமட்டுமின்றி கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். தனது தந்தை மாவட்டத்தில் இல்லாத குறையை இவர் தீர்த்து வருகிறார் என்றே கூறலாம். அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு கடந்த சில ஆண்டுகளாக கட்சி பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். அதனால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அனைவரும் அருண் நேரு, கட்சியில் பதவிக்கு வர வேண்டும் எனவும் அரசியலில் கால் பதிக்க வேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். வருகின்ற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு சீட் வாங்க திமுக தலைமையிடம் கே.என் நேரு கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு விளக்கமளித்த அருண் நேரு, திமுக தலைமை போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்று தெரியவில்லை என்று கூறினார்.