ஜெயலலிதா மரணம் பற்றி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை: இன்று சட்டப் பேரவையில் தாக்கல்..!

ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை முடித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 608 பக்க அறிக்கையை ஆகஸ்டு மாத இறுதியில் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கை இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன் இதை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் விவாதிக்கப்படவுள்ளது. ஆங்கிலத்தில் 500 பக்கம் உள்ள அறிக்கை, தமிழில் 608 பக்கமாக உள்ளது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் அளித்த அறிக்கையும் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆகஸ்டு 27ஆம் தேதி முதலமைச்சரிடம் அறிக்கையை வழங்கிய பிறகு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நீதியரசர் ஆறுமுகசாமி சாட்சிகளை விசாரிப்பதில் தாம் காலதாமதம் செய்யவில்லை என்று தெரிவித்தார். சாட்சிகளிடம் விரிவாக விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆணையத்தின் ஐயங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன என்று கூறிய அவர், இரண்டு பிரிவுகளாக பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறிய அவர், விசாரணைக்கு சசிகலா முழு ஒத்துழைப்பு அளித்தார் என்றும் குறிப்பிட்டார்.

சசிகலா நேரில் வராததால் அவரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெறப்பட்டது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சசிகலா நேரில் வர மறுத்துவிட்ட நிலையில் அவரை நேரில் வரவேண்டும் என்று நிர்பந்திக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால், நேரில் வரவைக்கவேண்டும் என்ற அதிகாரத்தை சோதிக்க விரும்பினால், மேலும் காலதாமதம் ஆகும் என்ற விமர்சனம் வரும் அதனால், எழுத்துபூர்வ அறிக்கையே போதும் என்று முடித்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.விசாரணை நடத்தப்பட்டவிதம் தமக்கு திருப்திதான் என்றும் அவர் கூறினார்.

மனுதாரர் உள்பட 154 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம் என்றும் நீதியரசர் ஆறுமுகசாமி தெரிவித்தார்.

அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த நீதிபதி ஆறுமுகசாமி

இந்த அறிக்கையை வெளியிடலாமா என அரசாங்கம்தான் முடிவு செய்யவேண்டும் என்று கூறிய நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணைக்கு வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஒத்துழைப்பு தந்தர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒத்துழைப்பு தந்தார்கள் என்றார்.

கடந்த 2016 செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அங்கேயே உடல் நலன் குன்றி டிசம்பர் 5-ம் தேதி மருத்துவமனையில் மரணமடைந்தார்.

பிறகு அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம் எழுப்பினார். அவரைத் தொடர்ந்து அவரது அணியில் இருந்த பலரும் இதுபோன்ற சந்தேகத்தை எழுப்பினர். வனத்துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவர் இட்லி சாப்பிட்டார், உடல்நலன் தேறிவருகிறார் என்று தெரிவித்தது பொய் என்று கூறி மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

சீனிவாசனின் கருத்துக்கு பதில் அளித்த அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் தினகரன் விசாரணை ஆணையம் அமைத்தால் அதற்கு ஒத்துழைப்பு தர தயார் என்று அறிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சமயத்தில் எடுக்கப்பட்ட காணொளி கட்சிகள் உள்ளதாகவும், தேவைப்பட்டால் விசாரணை கமிஷனுக்கு அவற்றை அளிக்க தயங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து 2017 செப்டம்பர் 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக வரவேற்றது.