கோவையில் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதால் தான் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
உலக பிசியோ தெரபி தினத்தையொட்டி தமிழ்நாடு பிசியோ தெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோவையில் நேற்று நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் பாஜகவினர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கான கோரிக்கைகள் இருந்தால் மாவட்டஆட்சியர் அல்லது காவல் துறை அதிகாரிகளிடம் முன்வைக்கலாம்.
ஆனால், அதை விடுத்து சாலை மறியலில் ஈடுபடுவது, சட்டம் – ஒழுங்கை சீர்குலைப்பதில் ஈடுபட்டவர்களை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் கோவையில் ஏதோ ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுவது போல செய்திகள் வருகின்றன.
கோவையில் எந்த அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இயல்பு வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து பதற்றமான செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்’ என்றார்.