திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் அர்ஜுன் சம்பத்.

திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நீதிபதி மீனா சந்திரா முன்னிலையில் ஆஜரானார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது பெரும்பான்மையான ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில், ஸ்ரீரங்கம் கோவில் முன் ஈ.வெ.ரா.சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அச்சிலையை அகற்ற வேண்டும் என்பது தான் கடவுள் நம்பிக்கையுடையோரின் நீண்ட கால கோரிக்கை. இந்த நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாததால், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற் கிடையில், ‘பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை பின்பற்றும் வகையிலாவது தமிழகம் முழுவதும் ‘கடவுள் இல்லை’ என்ற வாசகத்துடன் வைக்கப் பட்டுள்ள ஈ.வெ.ரா. சிலையையும் மற்ற சிலைகளையும் அகற்ற வேண்டும். இல்லை யென்றால் ஹிந்து உணர்வாளர்களை திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். திருச்சி மாவட்டம், செந்துறை கிராமத்தில், பழமை வாய்ந்த சிவன் கோவில் கூட வக்பு வாரியத்துக்கு சொந்தமாக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் உடனடியாக வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்கான மசோதாவை நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு கொண்டு வர வேண்டும். சனாதன தர்மம் மற்றும் ஆன்மிகத்திற்கு ஆதரவாக செயல்படுபவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதை தடுக்கும் விதமாக ஸ்ரீரங்கத்தில் சனாதன ஆதரவு வக்கீல்கள் கூட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். அர்ஜுன் சம்பத் பேச்சால் அரசியல்வாதிகளிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.