பொள்ளாச்சி எரிப்பட்டி மேற்கு வீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 28). டிரைவர். இவரது தங்கை தேவி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (24). மெக்கானிக். இவரும் தேவியும் பள்ளி நண்பர்கள். வீட்டின் அருகே இருந்ததாலும், நண்பர் என்பதாலும் தேவி, வெற்றிவேலிடம் பேசி வந்தார். இந்த நிலையில் வெற்றிவேலின் நடவடிக்கை சரியில்லாததால் கடந்த சில நாட்களாக தேவி அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வெற்றிவேல், தேவியின் வீட்டுக்கு சென்றார். வீட்டின் முன்பு நின்று அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சத்தத்தை கேட்டு ஜெயபிரகாஷ் அங்கு வந்து பார்த்தார். அவர் வெற்றிவேலிடம் எதற்காக சத்தம் போட்டு கொண்டு இருக்கிறாய், இங்கு இருந்து போய்விடு என்றார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெற்றிவேல், ஜெயபிரகாசை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.இதனால் பயந்துபோன ஜெயபிரகாஷ் இதுகுறித்து நெகமம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வெற்றிவேலை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.