புதிதாக வீட்டு மனை வாங்குவோர் மற்றும் விற்பவர்கள் பட்டா மாற்றுவதற்காக சிரமத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செயலிலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைப்பிரிவில், மனைகளை வாங்கும் மக்கள், அதனை கிரையம் செய்யும்போது ஒவ்வொரு மனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய தனியாக மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. மேலும் மொத்தமாக ஒரு பிரிவில் பல வீட்டு மனைகள் உள்ளபோது அதில் ஒவ்வொரு மனைகளையும் வெவ்வேறு நபர்கள் வாங்குகின்றனர்.
இந்த மனைகளை வாங்கிய மக்கள் அதனை தங்கள் பெயருக்கு பட்டா மாற்ற புதிதாக மனுக்கள் கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த பட்டா மாற்றும் செயல்முறைக்காக நில அளவர் ஒரே இடத்திற்கு பலமுறை சென்று நிலத்தை அளக்கும் சூழலும் இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றும் வகையிலும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையிலும் தமிழக அரசு சார்பில் வீட்டு மனைபட்டாவுக்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நில அளவை மற்றும் நிலவரிதிட்ட இயக்கத்தின் தமிழ் நிலம் வலைதளத்தில் (https://tamilnilam.tn.gov.in), அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை மொத்தமாக உருவாக்குதல், இந்த மனைகளுக்காக பட்டா மாற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்காவும், மாநகராட்சி மற்றும் நகராட்சியின் வருவாய் பின் தொடர் பணிகளுக்காகவும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செயலிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போது தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 1.50 லட்சம் மனுக்கள் உட்பிரிவு (பட்டா) மாறுதலுக்கான பெறப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான மனுக்கள் மனைப்பிரிவுகளை சார்ந்ததாக இருக்கிறது. இதில் அனைத்து மனுக்களையும் செயல்படுத்த கால தாமதம் ஆகி வருவதால், இந்த புதிய செயலி மூலம் இந்த செயல்முறையை எளிதாக மாற்ற திட்டமிட்டு இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய செயலி மூலம், மனைப்பிரிவுகள் அனைத்தையும் உட்பிரிவு செய்து உரிமையாளரின் பெயருக்கு மாற்றப்படும். இந்த செயலி மூலம் அங்கீகரிக்கப்பட்ட மனைகளும் உரிமையாளரின் பெயருக்கு பட்டா மாற்றப்படும். இந்த மனைகளை பொதுமக்கள் உரிமையாளரிடம் இருந்து பெறும்போது, பத்திரம் பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் தானியங்கி பட்டா மாறுதல் முறையில், வாங்கியவரின் பெயரில் பட்டா மாற்றப்படும்.
இதற்காக பொதுமக்கள் தனியா விண்ணப்பம் கொடுக்கவோ, அல்லது வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் வரவோ தேவையில்லை. மேலும் இந்த செயல்முறை மூலம் தனியாக பட்டா வேண்டி விண்ணப்பம் செய்ய தேவையில்லை. பட்டா வேண்டி மனைப்பிரிவு சார்ந்த பெறப்படும் மனுக்கள் பெருமளவு குறையும்.
இதில் மனைபிரிவுகளில் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் பூங்காக்களுக்கான இடம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பெயரில் பதிவு செய்யப்படும். இதன் மூலம் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வது தடுக்கப்படும். மோசடி செய்து நிலங்களை விற்பனை செய்வது தவிர்க்கப்படும்.