பொது இடங்களில் புகைப் பிடிப்போர் மற்றும் புகையிலை பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 200 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்துவதற்கான சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.
இதுகுறித்து, புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான அமைப்பின் நிர்வாகி சிரில் அலெக்சாண்டர் கூறியதாவது: “தமிழகத்தில், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உட்பட 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை பின்பற்றி யாரும் செயலாற்றாததால் பஸ் நிலையங்கள், டீக் கடைகள், வாகனம் ஓட்டும்போது என பொது இடங்களில் சிகரெட், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
அவர்கள் மூலம், புகையிலையை பயன்படுத்தாதோருக்கும் சுவாசப் பிரச்சனை, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொது இடங்களில் புகையிலை பயன்பாட்டை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்கக அதிகாரிகள் கூறுகையில், ‘பொது இடத்தில் புகைப் பிடித்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்க பார்லிமென்டில் மத்திய அரசு சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளது.
விரைவில் இது நடைமுறைக்கு வர உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் பொது இடத்தில் புகைப் பிடிப்போருக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கும்’ என்றனர்.