கோவை உள்பட 12 மாவட்டங்களுக்கு வளர்ச்சி திட்ட பணி கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு..!

சென்னை: தமிழ்நாட்டில் கோவை, காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களுக்கு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வளர்ச்சி துறை திட்ட பணிகளை கண்காணிக்கும் வகையில் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தவிர ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் மீதமுள்ள 12 மாவட்டங்களுக்கான வளர்ச்சி துறை திட்ட பணிகளுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக 12 ஐஏஎஸ்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

இந்த கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் உள்ளிட்ட கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். தற்போதைய உத்தரவின்படி அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், திருப்பூர் மாவட்டங்களுக்கு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்துக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளர் அருள்ராஜ், கோவை மாவட்டத்துக்கு சிப்கோ நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு லலித் யாதவ், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஊரக வளர்ச்சி துறை செயலாளர் செந்தில் குமார், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு ரமேஷ்சந்த் மீனா, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு குமரகுருபன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நாகராஜன், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நந்தகுமார், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ஷில்பா பிரபாகர், சேலம் மாவட்டத்துக்கு சங்கர், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு ககன்தீப் சிங் பேடி, திருப்பூர் மாவட்டத்துக்கு விஜயகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.