தேர்தலை புறக்கணிப்பதாக சிங்காநல்லூர் மக்கள் அறிவிப்பு

கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் சூர்யா நகர், சிவலிங்கபுரம், காமாட்சிபுரம், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் சூர்யா நகர் ராமச்சந்திரா சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. இப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டி நிலை உள்ளது. அடிக்கடி ரயில்கள் வந்து ரயில்வே கேட்டை மூடி விடுவதால் குறித்த நேர்த்தில் உரிய இடத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அவ்வழியை தவிர்த்து செல்ல மெயின் ரோட்டுக்கு செல்ல வேண்டும். அதற்கு 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. எனவே இப்பகுதியில் உடனடியாக ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை மேம்பாலம் அமைக்கப்படவில்லை. மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசு தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் சிங்காநல்லூர் சுற்று வட்டார பகுதி மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதனால் 55 மற்றும் 56 வது வார்டில் வசிக்கும் மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக் கணிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக பேனர்களை வைத்து உள்ளனர். தேர்தல் நேரத்தில் பொதுமக்களின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.