கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் பதவிக்கு போட்டியிடும் தமிழக வம்சாவளியான அஞ்சலி அப்பாதுரை..!!

விக்டோரியா: கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அஞ்சலி அப்பாதுரை என்ற பெண் போட்டியிடுகிறார்.

வட அமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள கனடாவில் 10 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

2017 பேரவைத் தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் புதிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. அந்த மாகாணத்தின் முதல்வராக ஜான் ஹோர்கன் (62) உள்ளார். புற்றுநோய் காரணமாக கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக உள்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண வீட்டு வசதி, சட்டத்துறை அமைச்சர் டேவிட் எபி (46) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அஞ்சலி அப்பாதுரை (32) களமிறங்கியுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

நவம்பர் 13 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி டிசம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி உள்கட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கட்சியின் புதிய தலைவராக தேர்வுசெய்யப்படுபவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வராக பதவியேற்பார். வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு போட்டியிடும் அஞ்சலி அப்பாதுரை, தமிழகத்தின் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். அவருக்கு 6 வயது இருக்கும்போது பெற்றோர் கனடாவுக்கு குடிபெயர்ந்தனர்.

அவரது குடும்பம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் குக்குவிச்சி நகரில் வசிக்கிறது. சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கிய அஞ்சலி, அரசின் கல்வி உதவித் தொகை பெற்று அமெரிக்காவின் மெய்னி மாகாணம், பார் ஹார்பர் நகரில் செயல்பட்டு வரும் காலேஜ் ஆப் அட்லாண்டிக் கல்லூரியில் சர்வதேச அரசியல் மற்றும் பருவநிலை கொள்கை பாடத்தில் பட்டம் பெற்றார். சுற்றுச்சூழலில் அதிக ஆர்வம் கொண்ட அஞ்சலி, ஐ.நா. சபை உள்பட பல்வேறு சர்வதேச அரங்குகளில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

முதல்வர் பதவிக்கு போட்டியிடும் அஞ்சலி அப்பாதுரை கூறியதாவது: நான் கனடாவில் குடியேறியவள். இந்த மண்ணை நேசிக்கிறேன். இது எனது தாய் வீடு. எல்லா மனிதர்களும் சரிசமம் என கருதுகிறேன். மக்களுக்கு சேவை செய்வதை எனது கடமையாக கருதுகிறேன். மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடி வருகிறேன். ஐ.நா. சபை உள்பட பல்வேறு சபைகளில் சுற்றுச்சூழலுக்காக குரல் எழுப்பி இருக்கிறேன்.

பருவநிலை மாறுபாட்டை எதிர்கொள்வது தொடர்பாக ஆட்சியாளர்களிடம் எவ்வித திட்டமும் இல்லை. கடந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அடுத்தடுத்து பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டன. ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டனர். வயல்வெளிகள் எல்லாம் தண்ணீரில் மூழ்கின. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டது.

அடுத்து, வெப்பச் சலனம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். ஆனால், சுற்றுச்சூழலை பாதுகாக்க இதுவரை போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் கனடாவின் சூழலை அழித்து வருகின்றன. அந்த நிறுவனங்களால் நதிகள் பாழாகின்றன. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. முறையான திட்டமிடல்களால் மட்டுமே காலநிலை மாற்றத்தைத் தடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். இதற்காகவே, நான் பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயகக் கட்சித் தலைவராக போட்டியிடுகிறேன். கட்சி உறுப்பினராகி எனக்கு அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அஞ்சலி கூறினார்.

அஞ்சலி அப்பாதுரை சுற்றுச்சூழல், அரசியல் மட்டுமன்றி இசை, சல்சா நடனத்திலும் அதிக ஆர்வம்கொண்டவர். பல்வேறு இசை ஆல்பங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.