ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்..!

பொள்ளாச்சி:
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இதில் பல்லுயிர் சூழல், விலங்குகளின் உணவுச் சங்கிலி ஆகியன குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வனத்துறையின் மூலம் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 2 முறை கணக்கெடுப்பு நடைபெறும். இதில் புலி உள்ளிட்ட மாமிச உண்ணிகள், அவற்றின் இரை விலங்கான மான், கேளை ஆடு, சருகுமான், கடமான் உள்ளிட்டவைகள் கணக்கிடப்படும். இதன் மூலம் புலிகள் காப்பகத்தில் உயிர்ச்சூழல் மண்டலம் மற்றும் உணவுச் சங்கிலி அமைப்பு ஆரோக்கியமாக இருக்கிறதா என கண்டறியப்படும். புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி வன கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி மானாம்பள்ளி, 4 வனச்சரகங்களில், காலை 7 மணிக்கு வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டன.

32 வனக்காவல் சுற்றுகளில் 62 நேர்கோட்டு பாதையில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. பொள்ளாச்சி வனச்சரகத்தில் போத்தமடை, ஆயிரங்கால், தண்ணீர் பள்ளம், பச்சைதண்ணீர், மாங்கரை, வில்லோனி, ஆழியாறு, கோபால்சாமிமலை, அர்த்தநாரிப் பாளையம், பருத்தியூர் உள்ளிட்ட வனச்சுற்றுகளில் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது. கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் தினமும் வனத்திற்குள் சென்று வன விலங்குகளின் கால் தடம், எச்சம், மரங்களில் காணப்படும் நகக்கீறல்கள், விலங்குகளை நேரில் பார்த்தல், ஒலியை கேட்டல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, ஜி.பி.ஆர்.எஸ் கருவியின் துணையுடன் அளவீடுகள், நேரம் ஆகியவை குறிக்கப்பட்டு கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வனவர் சிவக்குமார் தலைமையில் வனகாப்பாளர் ஜோனி, வேட்டைத்தடுப்பு காவலர் நாகராஜ், சுற்றுச்சூழல் காவலர் கதிர்வேல் ஆகியோர் அடங்கிய வனக்குழுவினர் வில்லோனி வனச்சுற்று பகுதியில் உள்ள சித்தாறு ஓடை பகுதியில் மரத்தில் சிறுத்தையின் நகக்கீறல்களையும், காட்டெருமையின் காலடி தடத்தையும் பதிவு செய்தனர். இந்த பணியில் 180 பேர் அடங்கிய குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர்.