அரசு பஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி. வாலிபர் கைது.

கோவை அருகே உள்ள நரசிபுரத்திலிருந்து டவுன்ஹால் வரை செல்லும் அரசு டவுன் பஸ் (எண் 58) தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது குடிபோதையில் வாலிபர் ஒருவர் திடீரென்று சாலையை கடக்க முயன்றார் .இதனால் பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். இதற்கிடையே ஆத்திரமடைந்த வாலிபர் தன் மீது மோதுவது போல் பஸ்சை ஓட்டி வந்ததாக கூறி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த போதை ஆசாமி தன் கையில் வைத்திருந்த பாட்டிலில் உள்ள பெட்ரோலை பஸ்சின் முன்பக்க டயரில் ஊற்றி தீ வைக்க முயன்றார் .இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் .கண்டக்டர் மற்றும் பயணிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தொண்டாமுத்தூர்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தொண்டாமுத்தூர் முத்தி பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த விக்னேஷ் குமார் என்பது தெரியவந்தது. இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பக்கம் உள்ள சாக்கோட்டை. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.