Hand holding a Social Media 3d Sphere

ஊடகவியலாளர்களின் அங்கீகாரம் விதிமுறையில் திருத்தம்: கடும் எதிர்ப்பை கிளப்பிய ஊடக அமைப்புகள்.!!

ஊடகவியலாளர்களின் அங்கீகாரத்தைத் தீர்மானிப்பது தொடர்பாக உருவாக்கப்பட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகுருக்குப் பல்வேறு ஊடகத் துறை அமைப்புகள் நேற்று கடிதம் எழுதியிருக்கின்றன.

இந்தக் கடிதத்தில் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, இந்தியன் விமன் பிரஸ் கார்ப்ஸ், பிரஸ் அசோசியேஷன், டெல்லி யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ், வொர்க்கிங் நியூஸ் கேமராமென்’ஸ் அசோசியேஷன் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் கையெழுத்திட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக, பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்த கூட்டத்தில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா உருவாக்கியிருந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வகையில், ஊடகவியலாளர்களின் அங்கீகாரம் தொடர்பான விதிமுறைகள் திருத்தப்பட்டிருப்பதாகவும், இவ்விஷயத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை ஒருதலைப்பட்சமான, நியாயமற்ற முடிவை எடுத்திருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 7-ல், மத்திய ஊடக அங்கீகார வழிகாட்டுதல்கள்-2022 வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒரு பத்திரிகையாளர் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, வெளிநாட்டு அரசுகளுடனான நட்புறவு, பொது அமைதி, கண்ணியம் அல்லது ஒழுக்கம் ஆகியவற்றுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பாரபட்சத்துடன் நடந்துகொண்டாலோ, அல்லது நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு, குற்றத்தைத் தூண்டுதலுடன் சம்பந்தப்பட்டிருந்தாலோ அவரது அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் அல்லது நிறுத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பத்திரிகையாளர் அல்லது ஊடக நிறுவனம் பிரதிநிதித்துவம் செய்யும் செய்தியில் தவறான தகவல்கள் அல்லது போலியான தகவல்கள் அல்லது ஆவணங்கள் இடம்பெற்றிருந்தாலோ கூட அங்கீகாரம் நிறுத்திவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘இதுபோன்ற தருணங்களில், பத்திரிகையாளர் / ஊடக நிறுவனத்தின் அங்கீகாரம் இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை நிறுத்திவைக்கப்படும். அதுதொடர்பான முடிவை மத்திய ஊடக அங்கீகார கமிட்டி (சி.எம்.ஏ.சி) எடுக்கும்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா உருவாக்கிய விதிமுறைகளைத் திருத்துவதையும், சமச்சீரற்ற வகையில் மத்திய ஊடக அங்கீகார கமிட்டியை உருவாக்குவதையும் கடுமையாக எதிர்ப்பதாக அந்தக் கடிதத்தில் ஊடக அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.