உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் தூதர்களை திடீரென பதவி நீக்கம் செய்து அறிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போர் நிலவி வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உயிரிழப்பு, சேதம் அதிகரித்து செல்கிறது. இருந்த போதிலும் போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு பல நாடுகள் ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்து வருவதால், ரஷ்யாவுடன் தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது.
இரு நாட்டு போர் பதற்றம் குறித்து ஐ.நா. அதிகாரிகள் தெரிவிக்கும்போது, நாட்டின் கிழக்குப் பகுதியில் மோதல்கள் அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் சீர்குலைந்து, பொதுமக்கள் சண்டையிலிருந்து வெளியேறுவதால், மனிதாபிமான தேவைகளில் உடனடி உயர்வை தூண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் உக்ரைனில் உள்ள மக்களின் மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் தூதர்களை பதவி நீக்கம் செய்வதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா, ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே, பங்களாதேஷ், மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உக்ரைன் தூதர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு வேறு புதிய பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.