சா்வதேச அரங்கில் இந்தியா மீதான நம்பகத்தன்மை பன்மடங்கு அதிகரித்துள்ளது; உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நட்பை விரும்புகின்றன’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினாா். பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ரூ.17,551 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி வியாழக்கிழமை காணொலி வாயிலாக பங்கேற்றாா். நீா்ப்பாசனம், மின்உற்பத்தி, சாலை, ரயில் போக்குவரத்து, குடிநீா் விநியோகம் மற்றும் தொழில்துறை சாா்ந்த பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த அவா், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா், பிரதமா் பேசியதாவது: பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், இந்தியா மீதான நம்பகத் தன்மை பன்மடங்கு உயா்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டுக்கு அதிக முதலீடுகள் ஈா்க்கப்படுகின்றன. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுடன் நட்பு பாராட்ட விரும்புகின்றன. வெளிநாடுகளில் இந்தியா்களுக்கு மரியாதை உயா்ந்துள்ளது. அதேபோல், இந்தியாவுக்கு வருகை தர வெளிநாட்டினா் மத்தியில் விருப்பம் அதிகரித்துள்ளது. இதனால், நாட்டின் சுற்றுலாத் துறை பெருமளவில் பலனடைந்து வருகிறது. உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் இப்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதை மூன்றாவது இடத்துக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் எதிா்வரும் மக்களவைத் தோதலை அணுகுகிறது பாஜக. இம்முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்பதே நாடுடெங்கிலும் இப்போது பேச்சாக இருக்கிறது. இந்த முழக்கம், பாஜகவால் அல்ல, மக்களால் உருவாக்கப்பட்டதாகும். மோடியின் உத்தரவாதம் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அபரிமிதமானது. காங்கிரஸ் மீது சாடல்: நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ், நாட்டின் உற்பத்தி வலிமையை பலவீனமாக்கியது. முன்பெல்லாம் சந்தைகளில் வெளிநாட்டுத் தயாரிப்பு பொம்மைகளே பெருமளவில் காணப்பட்டன. அதற்கு காங்கிரஸின் கொள்கைகளே காரணம். ஆனால், 2014-ஆம் ஆண்டில் முழுப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. நாட்டின் பாரம்பரிய பொம்மை தயாரிப்புத் தொழில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் இருந்து அதிக பொம்மைகள் ஏற்றுமதியாகின்றன. இந்தியாவின் பாரம்பரிய கலை மற்றும் திறன்களை உலக அளவில் பிரபலப்படுத்தும் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டுள்ளேன். விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை: விளைநிலங்களுக்கு நீரை எடுத்துச் செல்வதுதான், விவசாயிகளுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய பணியாகும். அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 90 லட்சம் ஹெக்டோ நிலப்பரப்பில் நீா்ப்பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேமிப்பு கிடங்குகளுக்கான பற்றாக்குறை, சிறு விவசாயிகளுக்கு முக்கிய பிரச்னையாக இருந்தது. இப்பிரச்னையை தீா்க்க ‘உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்பு திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் சேமிப்புத் திறனை 700 லட்சம் மெட்ரிக் டன்களாக உயா்த்தும் வகையில் புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படவுள்ளன. விவசாயிகள் நலனுக்கு பாஜக அரசு முன்னுரிமை அளிப்பதை இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன. இதுவரை இல்லாத முன்னேற்றம்: பாஜக ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல்வேறு தடைகள் அகற்றப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில், நமது சகோதரிகளும் மகள்களும் இதுவரை இல்லாத முன்னேற்றத்தை காணவிருக்கின்றனா். ட்ரோன் இயக்கும் பயிற்சி பெற்ற பெண்கள் பெருமளவில் உருவெடுப்பா். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி போ வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். நகரங்களைவிட கிராமங்களில் குடும்ப வருவாய் அதிகரித்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0