தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாநகர், புறநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் சி.க.சுஜாதா கூறுகையில் :- நேற்று புதன்கிழமை மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள எம் ஆர் பி செவிலியர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கோரிக்கை அட்டை அணிந்து பணிகளில் ஈடுபட்டோம்.8 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல எம்.ஆர்.பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப என்.எம்.சி மற்றும் ஐ.பி.ஹெச்.எஸ் பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர பணியிடங்கள் உருவாக்க வேண்டும்.கொரோனா காலகட்டத்தின் போது இரண்டரை வருடங்கள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
காலியாக உள்ள தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை உறுதி செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏராளமான செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர். மேலும் 03/02/2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும், 21/02/2024 அன்று சென்னையில் முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் பெருந்திரள் முறையீடு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது என கூறினார்.