கோவையில் 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் அல் – உம்மா இயக்க தலைவர் பாஷாவின் உடல் அடக்கம்.

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை தெற்கு உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த அல்-உம்மா இயக்க தலைவ ரான எஸ்.ஏ. பாஷா ( வயது 84 ) உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட எஸ். ஏ பாஷாவு க்கு முதுமை காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். 25 ஆண்டுகளாக சிறைக்குள் இருந்த அவர் கடந்த ஏப்ரல் மாதம் பரோலில் வெளியே வந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் எஸ்.ஏ. பாஷா உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உக்கடம் அன்பு நகரில் உள்ள மகன் சித்திக் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான தனியரசு, எஸ்.டி.பி.ஐ .மாநில துணைத்தலைவர் ஆஷா உமர் உட்பட கட்சி தலைவர்கள் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர் பின்னர் அவருடைய உடல் நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் ஏராளமான கலந்து கொண்டனர். பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் கபர்ஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இஸ்லாமிய முறைப்படி பாஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட கபர்ஸ்தான், தொழுகை நடத்தப்பட்ட பள்ளிவாசல் உட்பட பல்வேறு பகுதிகளிலும்,வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்காக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவை மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 5ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப்படை போலீசார்,கமாண்டோ படை போலீசார்,அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.