அதிமுக பொதுக்குழுவில் வரவு – செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் அனைவரும் எழுந்து நின்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். வழக்கமாக பொருளாளர் தான் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்வார். பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வராத நிலையில் அமைப்புச் செயலாளரான விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.
நிகழ்வில் உரையாற்றிய விஜயபாஸ்கர், ‘இன்றைய இடைக்கால பொதுச்செயலாளர், நாளைய நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ என்று புகழ்ந்தார். மேலும், ரூ.244.80 கோடி நிலை வைப்புத் தொகை அதிமுக கணக்கில் உள்ளது. நடப்பு கணக்கில் ரூ.2.77 கோடி ரூபாய் உள்ளது. 9.01.2021 முதல் 22.06.2022 வரை வரப்பெற்றுள்ள மொத்த வரவு ரூ.53.4 கோடி. மொத்த செலவுகள் ரூ.62 கோடி என்றும் தெரிவித்தார்.
பொருளாளர் ஓபிஎஸுக்கு பதில் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தது அதிமுகவின் பொருளாளராக ஆகிறாரா சி.விஜயபாஸ்கர் என்ற விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்துக்கே பொருளாளர் பதவி மீண்டும் ஒதுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.