டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விரைவாக நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016-ம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வராக்கப்பட்டார். அத்துடன் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இணைந்தே சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர்.
2017-ம் ஆண்டு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா சிறைக்கு சென்றார். முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி இருந்தார் சசிகலா.
சசிகலா பெங்களூர் சிறையில் தண்டனையை அனுபவித்த போது, அதிமுகவில் கலகக் குரல் எழுப்பிய ஓ.பன்னீர்செல்வம் திடீரென எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். அப்போது 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அக்கட்சி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் உருவாக்கப்பட்டன.
சசிகலா தம்மை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் சசிகலாவின் இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் செம்மலை ஒரு மனுத் தாக்கல் செய்தார். இதற்கு எதிராக சசிகலா உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். செம்மலையும் சசிகலா வழக்கில் கேவியட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இம்மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் நேற்று விசாரித்தார். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிட்டார்.