அதிமுக பொதுக்குழு செல்லாது என்கிற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து, ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை முதல் விசாரணைக்கு வர உள்ளது.
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாத நிலை ஏற்பட்டது. அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி , தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இருநீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். அதேநேரம், தங்களின் கருத்துக்களை கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது.
இந்த வழக்கு இன்று காலை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. விசாரணையின் போது, ஓ.பன்னீர் செல்வம் அணி வக்கீல்களும் ஆஜராகியிருந்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு நாளை பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஆகையால் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நாளை முதல் நடைபெறுகிறது.