விக்கிரவாண்டி தேர்தலில் மதவாத சக்திகளுக்கு வழிவிட்டு இருக்கிறது அதிமுக துரை வைகோ.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழக மக்கள் தாமாக முன்வந்து மதுவை ஒழிப்பதே தங்களது கடமை என்று மது குடிப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குறைக்கலாம் காலப்போக்கில் மதுவிலக்கு சட்டம் அமலுக்கு வரலாம் ஆம்ஸ்ட்ராங் கொலை கண்டிக்கத்தக்க ஒரு செயல். காவல்துறை மற்றும் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து சொல்லியுள்ளார்கள். இந்த கொலை அரசியல் காரணங்களுக்காக நடைபெற்றதா, இல்லை தனிப்பட்ட காரணத்திற்கு நடைபெற்றதா என விசாரணைக்கு பின்பு தான் தெரியும். தமிழகம் கலவர பூமியாக மாறுகிறது என்று சிலர் கூறுகிறார்கள், பாஜகவின் சில தலைவர்கள் சில கருத்துக்களை சொல்லி உள்ளார்கள். பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற தான் செய்கிறது.
ஆனால் அரசியல் பார்க்காமல் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவரது கட்சிக்கும் பேரிழப்பு. எதிர்காலத்தில் இது போன்று அரசியல் தலைவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடைபெறாமல் காவல் துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.
பூரண மதுவிலக்கு உள்ள குஜராத் உத்தர பிரதேசத்திலும் கள்ளச்சாராய மரணங்கள் நடைபெறத் தான் செய்தது. இது குறித்து மக்களுக்குத்தான் விழிப்புணர்வு இருக்க வேண்டும். எங்கள் சொந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமத்தில் அப்போதைய அரசு பொது மதுக்கடை திறப்பதாக அறிவித்ததற்கு எங்க தலைவர் தலைமையில் ஒட்டுமொத்த பொதுமக்களும் சேர்ந்து மதுக்கடை கூடாது என்று போராடி சட்டப் போராட்டத்தை நடத்தினோம். மக்கள் ஒன்று கூடி மதுக்கடை வேண்டாம் என்று சொன்னால் அரசாங்கமே நினைத்தாலும் திறக்க முடியாது. அதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மதுவை யாரும் கட்டாயப்படுத்தி குடிக்க சொல்வதில்லை. மதுக்கடைகளை மக்கள் புறக்கணிக்கும்போது அதற்கு உண்டான முடிவு இயற்கையாகவே வந்துவிடும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருக்கக் கூடாது. அவர்கள் புறக்கணிப்பது மதவாத சக்திகளான பாஜக தமிழகத்தில் வேரூன்ற வாய்ப்பாக உள்ளது. திமுகவுக்கு மாற்று அதிமுக என்று தான் நான் சொல்லுவேன். ஆனால் மதவாத சக்திகளுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருப்பதாக தான் நான் இதை நினைக்கிறேன்.
சென்னைக்கு மாற்றாக திருச்சியை நிர்வாக தலைநகராக அறிவித்தால் நான் அதை நிச்சயம் வரவேற்பேன். ஏனென்றால் திருச்சி தமிழகத்தின் மையத்தில் உள்ளது. இதனால் மக்கள் சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும். கண்டிப்பாக இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது தான். நான் தற்போது தான் பொதுவாழ்விற்கு வந்துள்ளேன் நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இதை ஒரு நினைவூட்டலாக கொண்டு நிச்சயம் இது தொடர்பாக முதல்வரிடம் பேசுவேன். மதுவை பொதுமக்கள் தான் புறக்கணிக்க வேண்டும் மதுவைப்பற்றி அரசு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது என்றார்.