பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதை ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருக்கலாம். தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேவைப்பட்டிருக்காது.
பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் பழனிச்சாமி கொண்டு வர முயற்சிப்பது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது. ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு திருத்தப்பட்ட கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதே நிர்வாக பதவி.
ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான காலம் ஐந்து ஆண்டுகள். கட்சியில் எந்த முடிவும் இருவரும் இணைந்து தான் எடுக்க வேண்டும் என்பதே விதி. கட்சி அலுவலகம், தேர்தல் முடிவு, நிர்வாகிகள் நியமனம் என அனைத்திலும் இருவர் இணைந்து முடிவெடுத்தால் தான் செல்லும். பொதுக்குழு செயற்குழு கூட்ட இருவரும் இணைந்து முடிவெடுக்க வேண்டும் என்று தான் விதி உள்ளன.
பழனிச்சாமி தரப்பு கூறியதைப் போல் இல்லை பொதுச்செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற பழனிச்சாமி முயற்சிக்கிறார். ஒருங்கிணைப்பாளர் தேர்வு என்பது கட்சியின் அடிப்படை விதிகளோடு தொடர்புடையது. அதிமுகவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி. எடப்பாடி பழனிச்சாமி வசதியாக கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளார் என ஓபிஎஸ் தனது தரப்பு வாதங்களை தெரிவித்தார்.