இந்தி திணிப்பு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம்..!

த்திய அரசு திட்டமிட்டு இந்தி திணிப்பில் ஈடுபடுவதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாய பாடமாக்குவது குறித்த பரிந்துரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.