தேர்தல் ஆணையத்தின் கடிதம் மீண்டும் நிராகரிப்பு: களத்தில் இறங்கிய ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு ஷாக்..!

ந்திய தேர்தல் ஆணையம் புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான ரிமோட் வாக்காளர் பெட்டி முறை நாடு முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதற்காக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் கருத்து கேட்டு கூட்டத்தை நடத்துமாறு சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தேர்தல் அதிகாரிகளை அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

அதனை அதிமுக தலைமை ஏற்க மறுத்து கடிதத்தை திருப்பி அனுப்பிய நிலையில் அதற்கான விளக்கத்தை தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அதனை அதிமுகவின் தலைமை அலுவலகம் ஏற்க மறுத்து மீண்டும் திருப்பி அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு தேர்தல் ஆணையர் கூட்டி இருந்த கூட்டத்திற்கு அதிமுகவினர் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்திற்கு அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் ஓபிஎஸ்-க்கு கிடைக்கப் பெறவிட்டாலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் இபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.