மனித விலங்கு மோதலை தவிர்க்கும் ஆலோசனைக் கூட்டத்தில், வனத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். வனவிலங்குகளால், விளைநிலங்களில் ஏற்படும் சேதத்திற்கு, உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என என்ற விவசாயிகளின் குமுறல்கள், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டமான கோவையின் மலை அடிவார கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள், காட்டு பன்றிகளால் விளைநிலங்கள் சேதம், யானைத்தாக்கி ஒருவர் பலி, போன்ற செய்திகள் சமீபகாலமாக தினந்தோறும் வெளிவருகின்றன. இதை கவனத்தில் கொண்ட, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, இன்று வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.இதில் கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி தலைமையில் வனச்சரக அலுவலர்கள் மற்றும் மாவட்ட முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் வராததை கண்டித்து, விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மத்திய இணை அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் செல்ல வேண்டி இருந்ததால், காலதாமதமாக வந்ததிற்கு வருத்தம் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய விவசாய தோட்டங்களில், சமிபகாலமாக யானைகள், காட்டு பன்றிகள், மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தோட்டத்தில் புகுவது, தொடர் கதையாக உள்ளது. இதனால் பயிர் சேதங்களும், உயிர் சேதங்களும் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஏழு ஆண்டுகள் வளர்க்கப்படும் ஒரு தென்னை மரம், பலன் கொடுக்க தொடங்கும் சமயத்தில், காட்டு யானைகள் புகுந்து தோட்டத்தை சேதப்படுத்துகின்றன. தென்னை மரம் ஒன்றுக்கு வனத்துறை 300 ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்குவதாக விவசாயிகள் குறைப்பட்டனர்.
பேட்டி
நடப்படும் தென்னை கன்றின் விலை, 300 ரூபாயாக உள்ளது. ஏழு ஆண்டுகள் அதனை பராமரித்து, தண்ணீர் ஊற்றி, வேலையாட்களுக்கு கூலி கொடுத்து ஏற்படும் செலவுகளை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.
பேட்டி
விலை நிலங்களில் புகும் காட்டு யானைகளை விரட்ட வரும் வன காவலர்களிடம், எந்த விதமான நவீன கருவிகளும் இல்லை. மாறாக பட்டாசுகளை மட்டுமே யானைகளை விரட்டும் ஆயுதமாக வனத்துறையினர் பயன்படுத்துகின்றனர். இதனால் விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள் விரட்டப்பட்டாலும், அவை பக்கத்து தோட்டங்களில் புகுந்து விடுவதாக தெரிவித்தனர்.
பேட்டி
வனத்தை விட்டு தோட்டத்திற்கு புகும் காட்டு பன்றிகளை சுட, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் அனுமதிக்கின்றன. ஆனால் இங்கு காட்டு பன்றிகள், விளை நிலங்களில் புகுந்ததை பார்த்து, வனத்துறைக்கு தகவல் சொன்னாலும், அவர்கள் வருவதற்குள் பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி சென்று விடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். எனவே காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்கும் சட்ட திருத்தத்தை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பேட்டி
விலை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் ,மயில் போன்ற அனைத்து காட்டு விலங்குகள் ஏற்படுத்தும் சேதங்களுக்கு இழப்பீடு உள்ளது. ஆனால் இந்த தகவல் பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரிவதில்லை. அந்தந்த மாவட்ட வனத்துறையே இழப்பீடு வழங்க முடியும் என விவசாயி சங்கத் தலைவர் கந்தசாமி கூறினார்.
பேட்டி.
உயிர் சூழலில் வனமும் முக்கியம், வனம் சார்ந்த விலங்குகளும் மிக முக்கியம். விவசாயிகளும் அவர்களின் விளை நிலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முதல் முறையாக நடைபெற்ற இந்த வனத்துறை விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட வனத்துறை அலுவலர் ஜெயராஜ், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பயிர் சேதங்களுக்கு உடனடியாக மாவட்ட வனத்துறை மூலமாக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.