ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் சோதனை செய்த அமெரிக்க தயாரிப்பான ஏவுகணை செலுத்தும் அதிநவீன பீரங்கியை ஆஸ்திரேலியா வாங்குவதற்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
உக்ரைன் மீது அறிவிக்கப்பட்டாத திடீர் தாக்குதலை கடந்த ஆண்டு ரஷ்யா தொடங்கியது. எனினும், அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை எதிர்த்து இன்னமும் உக்ரைன் போராடி வருகிறது.
ஆக்கிரமிப்பு ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் போர்க்களத்தில் நிலைநிறுத்தப்பட்ட அதே நீண்ட தூர, மொபைல் ராக்கெட் சிஸ்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு தர அமெரிக்கா ஆஃபர் கொடுத்தது.
அந்த ஆஃபரை ஏற்றுக் கொண்டதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தது.
ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம் (HIMARS) ஆஸ்திரேலியா மீதான தாக்குதல்களைத் தடுக்க பயன்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பாட் கான்ராய் கூறுகையில், “உக்ரைன் மோதலில் HIMARS அமைப்பின் செயல்திறனை பார்த்து நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். இந்த ஏவுகணையைப் பெற உலக அளவில் பல நாடுகள் வரிசையில் காத்திருக்கின்ற. எனவே, எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தோம்” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஏவுகணைகள், லாஞ்சர்கள் மற்றும் டிரைனிங் ராக்கெட்டுகளை உள்ளடக்கிய HIMARS ஐ 2026-2027 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா நிலை நிறுத்திவிடும்.
ஆஸ்திரேலியா HIMARS ஐ பெறுவதற்காக $1-2 பில்லியன் (US$680 மில்லியன்-1.4 பில்லியன்) செலவழிக்கும். HIMARS ஆனது ஆஸ்திரேலிய இராணுவத்தின் தாக்குதல் வரம்பை 30 கிலோமீட்டர்கள் (19 மைல்கள்) முதல் 300 கிமீ வரை நீட்டிக்கும். மேலும் எதிர்காலத்தில் துல்லியமாக தாக்கும் ஏவுகணை இலக்கை 500 கிமீ வரை நீட்டிக்கும் என்றார் அவர்.
சீனா, இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் பசிபிக் பகுதியில் செல்வாக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அமைச்சரிடம் பசிபிக் பிராந்தியில் HIMARS நிலைநிறுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பியதற்கு, “உலகில் எங்கும் கொண்டு செல்லக்கூடிய வகையில் அது தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக, உக்ரைனில் தங்கள் நாட்டு வீரர்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியதால்தான் உக்ரைன் ராணுவத்தால் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து துல்லியமாக ஏவுகணைத் தாக்குதல் நடத்த முடிந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
டொனட்ஸ்க் பிராந்தியத்தில் மகீவ்கா பகுதியில் முகாமிட்டிருந்த ரஷ்யா படை வீரர்கள் புத்தாண்டையொட்டி, தங்களது குடும்பத்தினருடன் போனில் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போர்க்களத்தில் ரஷ்ய வீரர்கள் செல்போன்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதியில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர்.