அதானி குழும விவகாரம்: மத்திய அரசு அளித்த மூடிய பரிந்துரை கடிதத்திற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு..!

புதுடெல்லி: அதானி குழும நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நிபுணர் குழு அமைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசால் அளிக்கப்பட்ட மூடிய பரிந்துரை கடிதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டென்பர்க் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு குற்றச்சாட்டியது. இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையை அடுத்து, அதானி குழுமத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்தது. பங்குச் சந்தையில் நடைபெறும் நிதி பரிவர்த்தனையை கண்காணிக்கும் மத்திய அரசின் அமைப்பான செபி, முறையாக செயல்படாததே இதுபோன்ற முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும், எனவே செபியின் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க உச்சநீதிமன்றம் நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

நிபுணர் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் செபியின் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. இதற்கு, உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு அமைப்பதில் ஆட்சேபம் இல்லை என செபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிபுணர் குழு அமைக்கும் விவகாரத்தில் ஆட்சேபம் இல்லை என்று மத்திய அரசும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் சீலிடப்பட்ட பரிந்துரை கடிதம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக சில பரிந்துரைகளை அரசு அதில் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டது.

இந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதனை திருப்பி அளித்துவிட்டது. இந்த விவகாரத்தில் முதலீட்டாளர்களின் நலன் கருதி வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த தாங்கள் விரும்புவதாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஜெ.பி. பர்திவாலா ஆகியோரைக் கொண்ட அமர்வு தெரிவித்தது.

அதோடு, நிபுணர் குழு அமைப்பது தொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. நிபுணர் குழுவில் யார் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக அரசு அல்லது மனுதாரர்கள் அளிக்கும் பரந்துரையை ஏற்கப் போவதில்லை என்றும், நிபணர் குழுவை தாங்களே முடிவு செய்யப் போவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.