டெல்லி: உச்சநீதிமன்றம் அமைத்த கமிட்டி, தொடர் ஆய்வுகளுக்கு பிறகு , அதானி குழுமம், நிறுவனங்களும் அதானியும் நேர்மையாக நாணயமாகவே செயல்பட்டு வந்துள்ளனர் என அறிக்கை வழங்கி உள்ளது.
அதானி குழுமம் “கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது” என்று குற்றம் சாட்டி ஹிண்டன்பர்க் நிறுவனம் மிகப்பெரிய அறிக்கை ஒன்றை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து இயங்கும் ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது 88 கேள்விகளை முன்வைத்தது.
மிகக் குறிப்பாக, மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பியது. அதானி நிறுவனங்களுக்கு “கணிசமான கடன்” இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஹிண்டர்பர்க் அறிக்கை காரணமாக உலகின இரண்டாவது பெரிய பணக்காரராக இருந்த அதானி சட்டென வீழ்ந்தார். பங்குககள் கடுமையான சரிவை சந்தித்தன. சில வாரங்கள் பங்குச்சந்தையில் அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அதானி நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டர்பர்க் நிறுவனம் குற்றமும் சாட்டியிருந்தது.
இந்நிலையில் அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், நீதிபதிகள் பி.எ.ஸ். நரசிம்ஹா, ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அமர்வு, நிபுணர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் அமைத்தது.இந்த குழு 2 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் எஸ்பிஐ முன்னாள் தலைவர் ஓ.பி.பட், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.பி. தேவ்தர், வங்கித் துறை நிபுணர் கே.வி. காமத், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலகேனி, வழக்கறிஞர் சோமசேகரன் சுந்தரேஷன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இரண்டு மாதங்கள் அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டர்பர்க் வெளியிட்ட அறிக்கை குறித்து விசாரணை நடத்திய உச்சநீதி மன்றம் அமைத்த கமிட்டி, ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் கட்ட விசாரணை அறிக்கையில், “அதானி குழுமம், நிறுவனங்களும் அதானியும் நேர்மையாக நாணயமாகவே செயல்பட்டு வந்துள்ளனர். செபியுமே எந்த விதிமுறைகளையும் அதானி நிறுவனமும் மீறவில்லை என்றே எங்களிடம் கூறியுள்ளது.
பங்குகளின் விலை விவகாரத்தில் அதானி குழுமம் முறைகேடாக செயல்படவில்லை/ சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிக்கத் தேவையான நடவடிக்கைகளையே அதானி குழுமம் எடுத்துள்ளது. அதானி குழுமம் எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் பங்குகளில் நம்பிக்கையை வளர்க்க உதவியது. பங்குகள் இப்போது நிலையான விலையில் இருக்கிறது” என உச்சநீதி மன்றம் அமைத்த கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மேலும் கூறுகையில், “தற்போதைய நிலையில் செபி அளித்த விளக்கங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், முதன்மையான அனுபவமான டேட்டாக்கள் மற்றும் பங்குகள் விலையை கையாளுதல் போன்ற குற்றச்சாட்டுகள் விவகாரத்தில், தவறுகள் நடந்திருப்பதாக முடிவு செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளது.
செபி அல்லது செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவிற்காக “தெளிவாக புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் சீரான” பயனுள்ள அமலாக்கக் கொள்கையை சட்ட ரீதியாக உருவாக்க வேண்டும் என்றும் அந்த குழு உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரைத்துள்ளது.