மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், ராணுவ நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றால் உலக நாடுகள் சில நிபந்தனைகளை ஒப்புகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க கடந்த வியாழக்கிழமை அதிபர் புதின் உத்தரவிட்டார்.
அதன்படி 5 நாட்களாக உக்ரைன் நாட்டில் கடும் போர் நிலவி வருகிறது.
முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம், அதன் பின்னர் பீரங்கி, டாங்கி ஆகியவற்றை அனுப்பி முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. இதனால் உக்ரைன் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் அறிவித்துள்ளன. குறிப்பாகச் சர்வதேச நிதி பரிவர்த்தனை முறையாக அறியப்படும் swift முறையில் இருந்தும் விலக்கவும் உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. ஆனால், இதையெல்லாம் கண்டு புதின் தனது முடிவுகளைப் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.
உக்ரைன் தலைநகர் கீவ் நகர் உள்ளிட்ட பல நகரங்களில் போர் உச்சமடைந்தது. இதனால் அங்குச் சிக்கிய இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வந்த நிலையில், நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஷ்யா கூறியது. அதன்படி இன்றைய தினம் ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்பு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ராணுவ நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என அதிபர் புதினிடமும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. புதின் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடும் முன்னரே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் அவரை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இதனிடையே இம்மானுவேல் மாக்ரோன் மீண்டும் அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்போது புதின், உலக நாடுகள் தனது சில நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் மட்டுமே ராணுவ நடவடிக்கையைக் கைவிடுவது குறித்து யோசிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டே இந்த கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் இதை எந்தவொரு நிபந்தனைகளும் இல்லாமல் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தீர்வு சாத்தியமாகும் என்று புதின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முதலில் கிரிமியா தீபகற்பத்தின் மீதான ரஷ்ய இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும். அடுத்து உக்ரைன் நாட்டின் ராணுவ பலம் குறைக்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக முக்கியமாக உக்ரைன் நடுநிலை நாடாக இருக்க வேண்டும். அதாவது நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை இணைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். உக்ரைன் நாட்டில் இனி நேட்டோ வீரர்களைப் பயிற்சி செய்ய அனுமதிக்கக் கூடாது என இந்த மூன்று நிபந்தனைகளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனிடம் ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியாக தகவல் வெளியாகி உள்ளது.