தலைமுடி உதிர்வால் மனமுடைந்த இளைஞர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை-கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..

கேரள மாநிலம் கோழிக்கோட்டையை சேர்ந்த பிரசாந்த்திற்கு கடந்த சில வருடங்களாகவே தலைமுடி உதிர்வு பிரச்சனை இருந்துள்ளது.

இதற்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக பிரசாந்த் 2014 ஆம் ஆண்டில் இருந்து ரபீக் என்ற டாக்டரிடத்தில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.

பிரசாந்த் மருத்துவரை அணுகுவதற்கு முன்பு ஆரம்பக்கட்ட தலைமுடி உதிர்வு மட்டுமே இருந்துள்ளது.

 

தலைமுடி உதிர்வு நின்று விடும் என்ற நம்பிக்கையில் பிரசாந்த் தொடர்ந்து மருந்துகளை 2020 ஆம் ஆண்டு வரை எடுத்து வந்துள்ளார்.

ஆனால் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகும் பிராசாந்திற்கு தலைமுடி மற்றும் கண் புருவத்தில் உள்ள முடி உதிர்வது நிற்காமல் பிரச்சனை
தீவிரமடைந்துள்ளது. இதனால் மனமுடைந்த பிரசாந்த் அக்டோபர் 1 ஆம் தேதி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டுத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த கடிதத்தில், என்னால் வீட்டை விட்டே வெளியில் வர முடியவில்லை. தலைமுடி உதிர்வுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் தான் என் இறப்பிற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை வைத்து பிரசாந்த் குடும்பத்தினர் அதோலி போலீசில் சமீபத்தில் புகார் அளித்திருந்தனர். ஆனால் காவலர்கள் மருத்துவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இது குறித்து அதோலி போலீஸ் ஒருவர் கூறுகையில்:-

இந்த சம்பவத்தில் முதன்மைக் குற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், மேலும் பிரசாந்த் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தலைமுடி உதிர்வு காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த சம்பவம் தீயாக பரவி வருகிறது.