பெரிய திட்டத்துடன் கிளம்பும் சுற்றுப்பயணம்…மேலிடம் தந்த சப்போர்ட்… சைலண்ட்டாக ஆக்சனில் இறங்கிய ஓபிஎஸ் ..?

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸின் சுற்றுப்பயணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் முழுவதுமே எடப்பாடி பழனிசாமியின் அதிரடிகள் மெல்ல மெல்ல ஆரம்பமாகின. ஆனால் ஓபிஎஸ் கொஞ்சமும் சளைக்கவே இல்லை.பதிலுக்கு அதிரடி அரசியல் செய்தாலும், பெரிதும் நம்பி இருந்ததும், தற்போது நம்பி இருப்பதும் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும்தான்.

இதுபோக, பாஜக மேலிடம் தந்த சப்போர்ட் எப்போதுமே பக்க பலமாக உள்ள நிலையில்தான், அவர் கையில் எடுத்துள்ள அஸ்திரம் சுற்றுப்பயணம் ஆகும்.

சுற்றுப்பயணம் என்பது வழக்கமாக அனைத்து தலைவர்களும் மேற்கொள்ளும் சாதாரண நிகழ்வு என்றாலும், ஓபிஎஸ்ஸுக்கு அப்படி இல்லை.. காரணம், கடந்த முறை தேர்தலின்போது, தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட இவர் தேனியை தாண்டவில்லை என்றார்கள். தமிழகம் முழுவதும் எடப்பாடி மட்டுமே சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, தேனிக்குள்ளேயே ஓபிஎஸ் முடங்கவிட்டதாகவும், இதுதான், திமுக வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் எடப்பாடி தரப்பில் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார்கள்

அப்படி, பொதுத்தேர்தலுக்குகூட, சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளாத ஓபிஎஸ், இந்த முறை மக்களை தேடி செல்கிறார் என்றால், இதுதான் ஓபிஎஸ் ஸ்டைல் அரசியல் என்கிறார்கள். சுற்றுப்பயண விவகாரம் ஓபிஎஸ்ஸின் தற்போதைய அரசியலில், நிறைய ஆதரவாளர்களை பெற்றுத்தரும் என்றும் சொல்கிறார்கள். முன்னதாக, மதுரையில் இருந்து தேனி செல்லும் வரை கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசியதற்கு காரணமே, தென்மண்டலத்தில் தனக்கான செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை நிரூபிப்பதற்காத்தானாம்.

ஓபிஎஸ் சுற்றுப்பயணம் தொடங்கிய அதேசமயம், சசிகலாவும் சென்னையில் தன்னுடைய சுற்றுப் பயணத்தை தொடங்கியதும் இங்கு கவனத்தை பெற்று வருகிறது.. 2 சுற்றுப் பயணங்களின் பின்னணியில் அரசியல் கணக்கு இருப்பதாகவும், ஏதேனும் ஒரு புள்ளியில் இவர்கள் சந்தித்து கைகுலுக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில்தான், இன்று அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணை நடக்கிறது..

பொதுக்குழுவை ரத்து செய்ய கோரி, இந்த கேஸை கோர்ட்டிற்கு கொண்டு சென்றதே ஓபிஎஸ்தான். 2 வாரத்திற்குள் இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டும் உத்தரவிட்ட நிலையில், இன்று விசாரணை தொடங்குகிறது.கடந்த மாதத்தை போல் இல்லாமல், இனி வரும் நீதிமன்ற உத்தரவுகள் ஓபிஎஸ்ஸூக்கு சாதகமாகவே இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.மேலும், தேர்தல் ஆணையம்கூட ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான உத்தரவையே தரலாம் என்றும் சொல்கிறார்கள்.

அதனால், இன்னும் 10 நாட்களில் பொதுக்குழு குறித்த நீதிமன்ற தீர்ப்பு வர உள்ளநிலையில், அது ஒருவேளை ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக இருக்கும் சூழலில், ஓபிஎஸ் ஆட்டம் ஆரம்பமாகும் என்கிறார்கள். எப்படி பார்த்தாலும், பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு முன்னதாக மாவட்டந்தோறும் அதிக அளவில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து நியமிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாம்.

அதுமட்டுமல்லாமல், இன்னொரு உத்தரவையும் ஓபிஎஸ் பிறப்பித்துள்ளாராம்.. தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அதிமுகவில் புதிய பொறுப்புகளை வழங்கி, எடப்பாடி டீமை திணற வைக்க வேண்டும் என்பதுடன், எடப்பாடி டீமில் அதிருப்தியில் உள்ளவர்கள், பதவி, பொறுப்பில் இல்லாதவர்கள் என அனைத்து அதிருப்திகளுக்கும் வலையை விரித்து தன்பக்கம் இழுத்து வர வேண்டும் என்றும் சொல்லி உள்ளாராம்.

கடந்த வாரமே இப்படி ஒரு முன்னெடுப்பினை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்து வரும் நிலையில், அதில் எடப்பாடி தரப்பின் சில முக்கிய நிர்வாகிகளும் சிக்கி உள்ளதாக தெரிகிறது. எந்த பொறுப்பும் இல்லாமல் இருப்பவர்களை தங்கள் பக்கம் அழைத்து வந்து, பொறுப்புகளை தரும் அதிரடியை ஓபிஎஸ் எடுத்துள்ளது, எடப்பாடிக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.. தவிர, நீதிமன்ற தீர்ப்பு தனக்கு அச்சாணியாக இருக்கும் என்று ஓபிஎஸ் பெரிதும் நம்புவதும், மேற்கொள்ள போகும் சுற்றுப்பயணங்களில் வேறு சில திட்டங்களையும் தீட்டிஉள்ளதும், எடப்பாடியின் கலக்கத்தை மேலும் அதிகரிக்க செய்து வருகிறதாம்.