15 வயது சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோவில் கைது..!

கோவை துடியலூர் அருகே உள்ள சாமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி.
இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜி.கவுண்டம் பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் பாபு (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 1½ வருடங்களாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் கார்த்திக் பாபு சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி சிறுமியை மத்தம்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து கார்த்திக் பாபு பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை திருமணம் செய்தார்.
பின்னர் திருமணம் செய்ததை யாரிடமும் தெரிவிக்காமல் அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். சிறுமி தனியாக இருக்கும் போது அவரது வீட்டிற்கு சென்ற கார்த்திக் பாபு அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி 3 மாத கர்ப்பமானார். இதனை தெரிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் 15 வயது சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கார்த்திக் பாபுவை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.