ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததை குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. உலகப்புகழ் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஈஸ்டர் திருநாள் விழா நடைபெற்றது. பாஸ்கா திருவிழிப்பு சடங்கில், இயேசு பிரான் உயிர்த்து எழுந்ததைக் குறிக்கும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது. கலை அரங்க வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் இருதயராஜ் அரங்கத்தின் மேடைக்கு எடுத்துச் சென்றார். பின்னர் பிரார்த்தனைகள் தொடங்கின. தொடர்ந்து இரவு 12 மணி அளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவையை கொடியை ஏந்தியபடி யேசு பிரான் உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். அத்துடன், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் இயேசுநாதர் மூன்றாம் நாள் உயிர்த்தெழும் நிகழ்ச்சியை தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதேபோல மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள செயின்ட் தெரசா தேவாலயத்தில் இருளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். கேரளா, டெல்லி, கோவா என இந்தியா முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் உள்ளம் உருகி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள் வருமாறு: பாமக நிறுவனர் ராமதாஸ்: ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் அனைவருக் கும் உளமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கருணையைப் போற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்துகள். நாட்டில்கூட்டாட்சித் தத்துவம் வெற்றிபெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் ஈஸ்டர் திருநாளில் சபதம் ஏற்போம். துயர் இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், விடியல் உதிக்கவும் இந்த ஈஸ்டர் திருநாளில் தமிழ்க் குலம் உறுதி எடுக்கட்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்.இயேசு போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்தவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன். மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சி கிறிஸ்தவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையின ருக்கு ஆதரவாகவும், பாதுகாப்பு அரணாகவும் செயல்படும். பாமக தலைவர் அன்புமணி: உலகின் இன்றைய தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாளாக ஈஸ்டர் பண்டிகை கொண் டாடப்படுகிறது. இந்நாளில், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அனைத்தும் பெருக அனைவரும் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0