பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக பதிவு..!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் கடிடங்கள் குலுங்கியதால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சத்தில் உறைந்தனர். பிலிப்பைன்சின் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா என்ற இடத்தில் 11 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் கழித்து பின் அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், மக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டது.

அதிகாலை நேரத்திலும் பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அச்சத்தில் வீதிகளில் நிற்கும் காட்சிகள் அங்குள்ள சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

நிலநடுக்கம் குறித்து மாஸ்பேட் மாகாண போலீஸ் தலைவர் ரால்லி அல்பனா கூறுகையில், “மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நன்கு தூங்கிக் கொண்டு இருந்த போது திடீரென வீடுகள் குலுங்கியதால் திடுக்கிட்டு எழுந்தேன். நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை” என்றார்.

அதேபோல், உசோன் நகர போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “நிலநடுக்கம் காரணமாக மக்கள் பல இடங்களிலும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளிலும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பின் அதிர்வுகளும் உணரப்பட்டது. எனினும், கட்டிடங்கள் எதுவும் சேதம் அடைந்தது போல் தெரியவில்லை. இருந்தாலும் பள்ளிக்கட்டிடங்கள் உள்ளிட்ட பொது கட்டிடங்களை ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன் பிறகே கட்டிடத்தில் விரிசல் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தெரிய வரும்” என்று தெரிவித்தனர்.

1990-ல் வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2,000 க்கும் மேற்பட்டோர் பலியானர்கள்.கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்நாட்டில் 6.4 என்ற ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். கட்டிடங்கள் சேதமடைந்தது, மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.