வாஷிங்டன்: உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.சீனாவில் 2019 இறுதியில் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஸ்தம்பிக்க வைத்தது.
இதன் காரணமாக உலகளவில் 69 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 69 லட்சம் பேர் உயிரிழந்தனர். பின் துவக்கத்தில் ஏற்பட்ட கொரோனாவில் இருந்து பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட பல்வேறு வகை உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023 முதல் உலகளவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததால் கொரோனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட ‘சர்வதேச சுகாதார அவசரநிலையை’ உலக சுகாதார நிறுவனம் திரும்ப பெற்றது.இந்நிலையில் பிஏ.2.86 என்ற மரபணு மாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் (சி.டி.சி.) தெரிவித்தது. மேலும் இது அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் நாடுகளில் பதிவாகியுள்ளது. இதன் பாதிப்பு வீரியம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.இதை உறுதி செய்த உலக சுகாதார நிறுவனம் இது ‘கண்காணிப்பு நிலையில்’ உள்ளது. இதன் தீவிரம் குறித்து அறிய மேலும் தகவல் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளது.