தொழில்நுட்ப மருத்துவத்துறையின் புதிய மைல் கல்.! மனித மூளையில் பொருத்தப்பட்ட ‘சிப்’.!

ருத்துவ அறிவியலின் மற்றொரு சாதனையாக அமெரிக்காவைச் சார்ந்த நிறுவனம் மனித மூளையில் வெற்றிகரமாக எலக்ட்ரானிக் சிப் பொருத்தி இருக்கிறது. மனித மூளையின் செயல்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்பத்துடன் ஆராய்ச்சி செய்வதற்காக இந்த சிப் பொருத்தப்பட்டிருப்பதாக நியூரா லிங்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் நியூரா லிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் தற்போது இருக்கும் உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மனிதனின் நரம்பு மண்டலம் மற்றும் மூளை பற்றிய ஆராய்ச்சிகளை செய்ய தொடங்கி இருக்கிறது. இதன் முதல் படியாக மனித மூளையில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது.

மிகவும் நுட்பமாக நடைபெற்ற அறுவை சிகிச்சையின் மூலம் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டதாக எலோன் மஸ்க் தெரிவித்திருக்கிறார். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து சிப்பிலிருந்து எலக்ட்ரானிக் சிக்னல்களின் பரிமாற்றங்கள் தொடங்க இருப்பதாக முதல் கட்ட பரிசோதனை முடிவுகள் தெரிவித்திருக்கிறது.

இந்த ஆய்வின் மூலம் மனிதர்களை செயல் இழக்க செய்யும் பக்கவாதம் போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த சிப் பொருத்தப்பட்டு ஆராய்ச்சிகள் நடைபெறுவதாக நியூரா லிங்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மனித மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் சிப் மூலம் எண்ணங்களை கட்டுப்படுத்தி அதன் அடிப்படையில் உறுப்புகளை செயல்பட வைக்க முயற்சிப்பதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் என நியூரா லிங்க் தெரிவித்து இருக்கிறது.