கோவை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு கனமழையாகவும், சாரலாகவும் மழை பெய்து வந்தது. இந்நிலையில்,
கோவை இராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் விநாயகர் கோயில் தெருவில் வசித்து வருபவர் செல்வி. தனது கணவர், மகன், மருமகள், 2 பேர பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டிற்கு வந்து 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மழைநீர் வீடுகளுக்கு புகுவதால் பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் செல்வி குடும்பத்தினர். தெருவின் ஓரத்தில் உள்ள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பால், மழை பெய்யும் போதெல்லாம் நீர் வெளியேறி சாலையிலும், சாக்கடையின் அருகில் வசிக்கும் செல்வி வீட்டிற்கு உள்ளேயும் மழைநீர் சென்று விடுகிறது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து வீடுகளுக்குள் செல்வதுடன், வீட்டினுள் உள்ள கழிவறையின் வழியாக நீர் வெளியேறி வீட்டிற்குள் நீர் நுழைவதால் வீடு முழுவதும் நீர் சூழப்பட்டு அவதியடைந்து வருவதாக கூறும் செல்வி, கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வொரு மழையின் போதும் இந்த சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிவிக்கிறார். மாநகராட்சி முதல் எம்.எல்.ஏ., கவுன்சிலர் வரை பலமுறை எழுத்துப்பூர்வமாகவும், நேரடியாகவும் புகார் அளித்து எந்தவித நடவடிக்கை இல்லை எனக்கூறும் செல்வி, சில சமயங்களில் பாம்பு உள்ளிட்டவை மழைநீருடன் வீடுகளுக்குள் வருவதால் இரு சிறார்களை வைத்துக்கொண்டு மிகவும் வேதனையை அனுபவித்து வருவதாக தெரிவிக்கிறார். ஒரு வீடு என்பதால் இந்த பிரச்னையை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என எண்ணும் செல்வி குடும்பத்தினர், நாங்களும் மனிதர்கள் தான் என்றும், தற்போது இந்த பிரச்சினை தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0