எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்…

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம், சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழுவில், கட்சி நிறுவனர் ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசிய பா.ம.க., நிர்வாகிகள், கூட்டணி தொடர்பாக ராமதாஸ் எடுக்கும் முடிவை ஏற்பதாக உறுதி தெரிவித்தனர். ‘பாரத ரத்னா தரவில்லையே’ – பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, ‘பாரத ரத்னா’ விருது கிடைக்காதது வருத்தம் அளிப்பதாக, அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.சென்னையில் நேற்று நடந்த பா.ம.க., சிறப்பு பொதுக்குழுவில் பேசிய ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டோர், அ.தி.மு.க., – பா.ஜ., மீதான விமர்சனங்களைத் தவிர்த்தனர். தி.மு.க., அரசுக்கு எதிராக மட்டும் தீர்மானம் நிறைவேற்றினர்.பொதுக்குழுவில் பேசிய அன்புமணி, ”பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக, இட ஒதுக்கீட்டிற்காக, 44 ஆண்டுகளாகப் போராடி வரும் மூத்த தலைவர் ராமதாசுக்கு, ‘பாரத ரத்னா, பத்மஸ்ரீ போன்ற நாட்டின் உயரிய விருதுகள் வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது,” என, மத்திய பா.ஜ., அரசு மீதான தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.பின், ஜி.கே.மணி முன்மொழிந்த அரசியல் தீர்மானம்:வரும் லோக்சபா தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து, அதற்கான உத்திகளை பா.ம.க., வகுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட, பா.ம.க., சிறப்பு பொதுக்குழு தீர்மானிக்கிறது.
எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, நிறுவனர் ராமதாசுக்கு பொதுக்குழு வழங்குகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, ராமதாஸ் பேசியதாவது:இப்போது எனக்கு வயது 85. பல தலைவர்கள், 90 வயதுக்கும் மேலாக வாழ்ந்து, மக்கள் பணியாற்றியுள்ளனர். அதுபோல கடைசி வரை தமிழக மக்களுக்காக பணியாற்றுவேன். நாட்டின் மிகப்பெரிய விருது ‘பாரத ரத்னா’.  அதை எனக்கு வழங்க வேண்டும் என, அன்புமணி சொன்னார்.பாரத ரத்னா விருது கொடுத்தாலும், அதைவிட பெரிய விருது கொடுத்தாலும், அதை நான் வாங்க மாட்டேன். பாரத ரத்னா விருதை நான் குறை சொல்லவில்லை. ஆனால், நான் மக்கள் மனங்களில் வாழ்கிறேன்; அதுவே போதுமானது.வரும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட, பா.ம.க., தயாராக இல்லை. வரும் 2026 சட்டசபை தேர்தலில், அது குறித்து முடிவெடுக்கலாம். இப்போதைய கூட்டணி குறித்து சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பேன். பா.ம.க.,வை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன். பா.ம.க.,வின் வெற்றிக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால், லோக்சபா தேர்தலில் 10 தொகுதிகளிலும், 2026 சட்டசபை தேர்தலில், 60 தொகுதிகளிலும் பா.ம.க.,வால் கட்டாயம் வெற்றி பெற முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.தி.மு.க., அரசுக்கு கண்டனம்!ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தாமதிக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம். விவசாயிகளுக்கு எதிரான தமிழக அரசின் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட, 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.